மதுரை அ.தி.மு.க. மாநாட்டிற்கு 700 வாகனங்களில் செல்ல முடிவு ; தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
மதுரை அ.தி.மு.க. மாநாட்டிற்கு 700 வாகனங்களில் செல்ல வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.;
செங்கோட்டை:
செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மதுரை மாநாடு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சண்முகையா வரவேற்றார்.
அதனைதொடா்ந்து மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி பேசுகையில், வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடியார் அழைப்பிற்கிணங்க அனைவரும் சொந்த பந்தங்கள் உற்றார் உறவினர்களுடன் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் உள்ளது. அதிகாலையில் அவருடைய நினைவிடம் சென்று கழகம் சார்பில் மரியாதை செலுத்திய பின்னர் மாநாட்டிற்கு வாகனங்களில் அணிவகுத்து செல்ல வேண்டும் என்றார்.
கூட்டத்தில் 700 வாகனங்களில் மாநாட்டுக்கு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பொய்கை சோ மாரியப்பன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவ ஆனந்த், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் ராமையா, மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஆர்.ராமசந்திரன், செல்லப்பன், வசந்தம் முத்துபாண்டியன், ஜெயகுமார், ரமேஷ், மகாராஜன், செல்வராஜ், வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் பலா் கலந்து கொண்டனர்.