சக்காளம்மன் கோவிலில் மாடு மாலை தாண்டும் திருவிழா

தோகைமலை அருகே சக்காளம்மன் கோவிலில் மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது. இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Update: 2022-08-16 18:54 GMT

சக்காளம்மன் கோவில்

தோகைமலை அருகே தெலுங்கபட்டியில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தின் சக்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாலை தாண்டும் திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 15 நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்துவரப்பட்டு கோவில் மற்றும் வீடுகளில் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சக்காளம்மன் கோவிலில் காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடங்கியது.

இதையடுத்து, முத்துபாலகிரி அரண்மனை, கஸ்தூரி ரெங்கா வசகாப்பு நாயக்கர் பாளையப்பட்டு மந்தை உள்ளிட்ட கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் விரதம் இருந்து சக்காளம்மனுக்கு 3 கால பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர்.

மாலை தாண்டும் திருவிழா

இந்தநிலையில், முத்துபாலகிரி கோவிலில் நேற்று தாரை, தப்பாட்டம் மற்றும் உருமி மேளம் முழங்க பூஜை கூடை அழைத்து வரப்பட்டது. பின்னர் 14 மந்தையர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, சலையத்து மாடு மாலை தாண்ட திருவிழா நடந்தது. முன்னதாக சக்காளம்மன் கோவில் முன்பாக அனைத்து மந்தை மாடுகளும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு தாரை தப்பாட்டம் முழங்க 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொத்து கொம்பு கோவிலுக்கு மாடுகள் அழைத்து சென்றனர். அதன்பின்னர் சிறப்பு அபிஷேகம் செய்து மாலை ஓட்டம் தொடங்கியது.

இதில், புதுக்கோட்டை மாவட்டம் சேமங்குளம் அய்யாசாமி மடையை சேர்ந்த மாடு முதலாவதாக வெற்றி பெற்றது. 2-வதாக கரூர் மாவட்டம் மனச்சனம்பட்டி உடுமலை சீல் நாயக்கர் மந்தையை சேர்ந்த மாடு வெற்றி பெற்றது. பின்னர் வெற்றி பெற்ற மாடுகளுக்கு 3 கன்னி பெண்கள் மஞ்சள் பொடியை தூவி வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முத்துபாலகிரி அரண்மனை, கஸ்தூரி ரெங்கா வசகாப்பு நாயக்கர் பாளையப்பட்டு மந்தை உள்ளிட்ட கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் மற்றும் திருச்சி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்