மாடு மாலை தாண்டும் திருவிழா

தரகம்பட்டி அருகே மாடு மாலை தாண்டும் திருவிழா கோலாகலமாக நடந்தது.

Update: 2023-08-10 18:59 GMT

மாடு மாைல தாண்டும் திருவிழா

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே கோடங்கிப்பட்டியில் வசிக்கும் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு முள்ளிப்பாடி மந்தையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாடு மாைல தாண்டும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக கரகம் பாலித்தல், அம்மன் குடி புகுதல் நிகழ்ச்சி நடந்தது. 2-ம் நாள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும், கிடா வெட்டியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சீறிப்பாய்ந்த மாடுகள்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முதலில் திருச்சி, கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த 14 மந்தையர்களுக்கு, முள்ளிப்பாடி மந்தையர்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாடுகள் அனைத்தும் தாரை தப்பட்டை முழங்க கோவில் எதிரே சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டன.

பின்னர் மாடுகள் மீது புன்னிய தீர்த்தம் தெளிக்கப்பட்டு விழா தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து 500-க்கும் மேற்பட்ட மாடுகள் எல்லை சாமி கோவிலில் இருந்து முள்ளிப்பாடி மந்தையில் உள்ள எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடி வந்தன. அப்போது கூடிநின்ற பொதுமக்கள், பக்தர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

எலுமிச்சை பழம் பரிசு

இதில், முதலாவதாக கோடங்கிப்பட்டி முள்ளிப்பாடி மந்தை மாடும், 2-வதுதாக கடவூர் முள்ளிப்பாடி மந்தை மாடும் ஓடி வந்து வெற்றி பெற்றன. இதையடுத்து முதலாவதாக ஓடி வந்த மாட்டின் மீது ஊர்வழக்கப்படி 3 கன்னி பெண்கள் கையில் வைத்திருந்த மஞ்சள் பொடியை தூவி எலுமிச்சைப்பழம் பரிசாக வழங்கப்பட்டது.

பின்னர் 3 கன்னி பெண்களும் அங்கிருந்து தேவராட்டத்துடன் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஊர்நாயக்கர், மந்தா நாயக்கர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்