மதுராந்தகம் ஏரியை விரைந்து தூர்வார வேண்டும் - குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை
மதுராந்தகம் ஏரியை விரைந்து தூர்வார வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.;
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து வீடு மனை பட்டா, குடிநீர், சாலை வசதி, முதியோர், விதவை உதவித்தொகை, போக்குவரத்து வசதி உள்ளிட்ட 281 மனுக்களை பொது மக்களிடம் இருந்து பெற்று அதனை துறை ரீதியாக அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மதுராந்தகம் பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக கோரிக்கை மனு கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரியில் கடந்த ஓராண்டாக தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக பக்கவாட்டு சுவர், நவீன ஷட்டர் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் ஏரி இன்னும் தூர்வாரப்படவில்லை சுமார் 10 அடி வரை வண்டல் மண் படிந்துள்ளதால் விரைந்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படி எடுக்கப்படும் வண்டல் மண் விவசாயிகளுக்கு உரிய அனுமதியுடன் விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தி்ல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), அறிவுடைநம்பி, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வெற்றி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.