மடத்துக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளிலிருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
புகை மண்டலம்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.குறிப்பாக மடத்துக்குளம்-கணியூர் சாலையின் இருபுறமும் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த செங்கல் சூளைகளில் எரிபொருளாக தென்னை மரங்கள் மற்றும் விறகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
பலநேரங்களில் பச்சை மரங்களை எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையான புகை மண்டலம் சூழ்கிறது. இதனால் மடத்துக்குளம் கணியூர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல் திணறும் நிலை ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்களும் நடைபெற்று வருகிறது.
சுவாசக்கோளாறுகள்
இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் அருகிலுள்ள விவசாயிகள் சுவாசக்கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் புகை மண்டலத்தில் சிக்கி மூச்சுத்திணறலுக்குள்ளாகும் நிலை உள்ளது. இதுதவிர செங்கல் சூளையிலிருந்து பறக்கும் மண் துகள்கள் வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து விபத்துக்களை உண்டாக்கும் நிலை உள்ளது.எனவே உரிய முறையில் தடுப்புகள் அமைத்து, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையிலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் செங்கல் சூளைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் செயல்படும் செங்கல் சூளைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர். இந்த நிலையில் செங்கல் சூளைகளால் ஏற்படும் பொதுமக்களின் இன்னலைப்போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர், மடத்துக்குளம் தாசில்தார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.