சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று பதவி ஏற்பு

தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) பதவி ஏற்கிறார்.

Update: 2022-09-12 23:50 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு வழியனுப்பு விழா நேற்று ஐகோர்ட்டு சார்பில் நடத்தப்பட்டது.

தலைமை நீதிபதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியை இதுவரை இந்திய ஜனாதிபதி நியமிக்கவில்லை.

கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டுகளின் மூத்த நீதிபதிகள் இருவரில் ஒருவரை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக விரைவில் ஜனாதிபதி நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு தலைமை நீதிபதி

அதுவரை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவியை கவனிக்க ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம்.துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.

இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமியை நியமித்து. ஜனாதிபதி கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார்.

இன்று பதவி ஏற்பு

ஜனாதிபதியின் உத்தரவின்படி, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி தலைமை நீதிபதி சேம்பரில் நடைபெற உள்ளது. இதன் பின்னர், பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமிக்கு, சக நீதிபதிகள், மத்திய-மாநில அரசு வக்கீல்கள் வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள்.

அதைத்தொடர்ந்து, இதுவரை தலைமை நீதிபதி விசாரித்து வந்த பொதுநல வழக்கு உள்ளிட்ட வழக்குகளை, ஐகோர்ட்டின் முதல் அமர்வில் அமர்ந்து சக நீதிபதியுடன் சேர்ந்து பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி விசாரிப்பார்.

Tags:    

மேலும் செய்திகள்