முன்னால் சென்ற லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து - 7 பேர் படுகாயம்
நாட்டறம்பள்ளி அருகே முன்னால் சென்ற லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்துக்கு உள்ளானதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜோலார்பேட்டை,
வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.அதே போல் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி டிராவல்ஸ் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள மேம்பாலம் என்ற இடத்தில் டிராவல்ஸ் பஸ் முன்னால் சென்று கொண்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விபத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மேலும் போலீசார் விசாரணையில் பஸ் டிரைவர் கவனக்குறைவாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.