பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு

Update: 2022-11-08 20:39 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தை அடுத்த தங்க நகரத்தில் உள்ள கீழ்பவானி கிளை வாய்க்காலில் கடந்த மாதம் 30-ந் தேதி மதகு உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. மேலும் வாய்க்கால் மேல்பகுதியில் ஓட்டை விழுந்தது. இதனால் தண்ணீர் வேகமாக வெளியேறியது. எனவே பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்காலுக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை பொறியாளர்கள் உடைந்த கால்வாயை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து ரூ.30 லட்சம் செலவில் புதிதாக 8 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலத்தில் புதிதாக கான்கிரீட் கிளை வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கடந்த 6-ந் தேதி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் நீர்வள பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தி அமைச்சர் சு.முத்துசாமி விரைவில் வாய்க்கால் சீரமைக்கப்பட்டு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்படி முதல் கட்டமாக நேற்று பகல் 11.30 மணி அளவில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பெரிய வாய்க்காலுக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும். குறிப்பிட்ட தங்க நகரம் கிளை வாய்க்காலில் இன்னும் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த பணி முடிவடைந்ததும் கிளை வாய்க்காலுக்கும் தண்ணீர் திறந்து விடப்படும் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்