பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு- அமைச்சர்-கலெக்டர் மலர் தூவினார்கள்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அமைச்சர்-கலெக்டர் மலர் தூவினார்கள்.
பவானிசாகர்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அமைச்சர்-கலெக்டர் மலர் தூவினார்கள்.
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பவானி ஆறும் மோயாறும் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை உடையது. தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை ஆகும். பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் வழியாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்கள் வழியாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.
நீர் வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் நீர் வரத்து ஆதாரங்களாக உள்ளன. கடந்த ஒரு மாதமாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி காலை 9 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 5-வது ஆண்டாக 102 அடியை எட்டியது.
பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
இந்தநிலையில் பவானிசாகர் அணையில் இருந்து நன்செய் பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்காலிலும், சென்னசமுத்திரம் கால்வாய் இரட்டைப்படை மதகுகளுக்கு பாசனத்திற்காக நேற்று காலை 7.15 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து விட்டார். பின்னர் சீறிப்பாய்ந்த தண்ணீருக்கு அமைச்சரும், கலெக்டர் கிருஷ்ணனுண்ணியும் மலர் தூவினார்கள். இந்த தண்ணீர் டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை சுழற்சி முறையில் 120 நாட்களுக்கு செல்லும். நன்செய் பாசனத்திற்காக திறக்கப்படும் இந்த தண்ணீரை சிக்கனமாக விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் சு.முத்துசாமி கேட்டுக்கொண்டார்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
படிப்படியாக அதிகரிப்பு
நேற்று காலை 8 மணிஅளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது.
கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது. தொடர்ந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 2300 கனஅடி வரை திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.