காரியாபட்டி பகுதியில் வெங்காயம் விளைச்சல் குறைவு-திருகல் நோய் பாதிப்பால் விவசாயிகள் வேதனை

காரியாபட்டி பகுதியில் வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ள நிலையில் அதில் திருகல் நோய் பாதிப்பால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2022-11-10 18:45 GMT

காரியாபட்டி

காரியாபட்டி பகுதியில் வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ள நிலையில் அதில் திருகல் நோய் பாதிப்பால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வெங்காயம் விளைச்சல்

காரியாபட்டி தாலுகா ஆவியூர், அரசகுளம், மாங்குளம், குரண்டி, எஸ்.மறைக்குளம், சித்தனேந்தல், சொக்கனேந்தல், பெரிய ஆலங்குளம், முஷ்டக்குறிச்சி மற்றும் நரிக்குடி பகுதியாக இசலி, பனைக்குடி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிக அளவில் வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர். வெங்காயம் பயிரிடும்போது உரிய முறையில் உரம் மற்றும் மருந்துகளை அடித்து பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் வெங்காயத்தில் திருகல் நோய் ஏற்பட்டு மகசூல் குறைவாக கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

ஒரு ஏக்கரில் வெங்காயம் நல்லமுறையில் விளைச்சல் அடைந்தால் நல்ல வருமானம் கிடைக்கும். ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் காலத்தில் விவசாயிகள் போதிய வருமானம் பார்ப்பார்கள். தற்போது ஒரு கிலோ தரமான வெங்காயம் ரூ.70-க்கு விற்பனை செய்தபோதிலும் திருகல் நோயால் விளைச்சல் குறைவாகவே உள்ளது.

கோரிக்கை

ஒரு ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிரிட்டு களை எடுப்பு, உரம் மற்றும் மருந்து தெளித்து பாதுகாத்து மகசூல் எடுக்கும் போது செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. காரியாபட்டி நரிக்குடி பகுதியில் வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் எந்த காலத்தில் வெங்காயம் பயிரிட்டு உரம் வைத்து மருந்து தெளிக்கும் முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும். காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் அனைவருக்கும் பயிர் காப்பீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்