நோய் தாக்குதலால் மகசூல் குறைந்த மலைப்பூண்டு

கொடைக்கானலில் மலைப்பூண்டு அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. மகசூல் குறைந்து விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-09-09 21:15 GMT

மலைப்பூண்டு சாகுபடி

கொடைக்கானல் மலைக்கிராமங்களில் விவசாயமே பிரதான தொழில் ஆகும். குறிப்பாக மேல்மலை கிராமங்களான பூண்டி, கிளாவரை, வில்பட்டி, மன்னவனூர், கவுஞ்சி, பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் 100 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் காய்கறி சாகுபடி நடந்து வருகிறது.

குறிப்பாக மலைப்பூண்டு, உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி, நூல்கோல் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டு மருத்துவ குணம் மிக்கது ஆகும். இதற்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அறுவடை பணி தீவிரம்

பாரம்பரியமாக மலைக்கிராம விவசாயிகள், அதிக அளவில் மலைப்பூண்டு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொடைக்கானல் மலைக்கிராமங்களில் மலைப்பூண்டு அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆனால் வழக்கமான மகசூல் கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதற்கு, மலைப்பூண்டில் வேர்ப்புழு நோய் தாக்குதல் ஏற்பட்டிருப்பது தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அதேநேரத்தில் விளைச்சல் குறைந்ததால் மலைப்பூண்டு விலை ஏறுமுகமாக உள்ளது. தற்போது ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மலைக்கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாங்கள் அறுவடை செய்யும் மலைப்பூண்டுகளை வெளியூர் சந்தைகளுக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.

எனவே வருங்காலத்தில் விதை பூண்டுகள் தரமாக கிடைப்பதற்கும், மலைப்பூண்டில் ஏற்பட்டுள்ள நோயை கட்டுப்படுத்த குழு அமைத்து ஆய்வு செய்வதற்கும் தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்