வரத்து குறைவு எதிரொலி: தக்காளி, இஞ்சி விலை மீண்டும் ஏறுமுகம்
வரத்து குறைவால் தக்காளி, இஞ்சி விலை மீண்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது.
சென்னை,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் இறுதியில் இருந்து காய்கறி விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பச்சை பட்டாணி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி வகைகளின் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதில் இஞ்சி, பச்சைப் பட்டாணி, சின்ன வெங்காயம் விலை இரட்டை சதம் அடித்தது.
தக்காளி விலையை பொறுத்தவரையில் மொத்த மார்க்கெட்டில் ரூ.150 வரை விற்பனை ஆகியுள்ளது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.160 முதல் ரூ.180 வரை அதிகபட்சமாக விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், அதன் விலையை கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசு பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி கிடைக்க ஏற்பாடு செய்தது. இருப்பினும் வரத்து குறைவால் தக்காளி விலை குறைந்தபாடில்லை.
மீண்டும் ஏறுமுகம்
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஓரளவுக்கு வரத்து வந்த நிலையில், தக்காளி விலை சற்று குறைந்து காணப்பட்டது. அதன்படி, கடந்த 24-ந்தேதி ஒரு கிலோ தக்காளி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை ஆனது. திடீரென்று நேற்று முன்தினம் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்து, ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்றும் தக்காளி விலை ஏறுமுகத்தில் இருந்தது. கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து, ரூ.90 முதல் ரூ.130 வரை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை ஆனது. வெளி மார்க்கெட்டில் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை ஆனதை பார்க்க முடிந்தது.
இஞ்சி விலையும் உயர்வு
இதேபோல், கடந்த சில நாட்களாக விலை உயராமல் இருந்த இஞ்சி விலையும் நேற்று கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்து, ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்து காணப்பட்டது. இதுதவிர மற்ற காய்கறி விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருந்தது.
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் மழை காரணமாக தக்காளி, இஞ்சி வரத்து வெகுவாக குறைந்திருப்பதாகவும், அதன் காரணமாக அவற்றின் விலை உயர்ந்து இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
தக்காளி, இஞ்சியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.