புரட்டாசி மாதத்தையொட்டிகறிக்கோழி கொள்முதல் விலை குறைவு-உற்பத்தியாளர்கள் கவலை

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு கறிக்கோழி கொள்முதல் விலை குறைந்துவருவதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2022-10-02 18:45 GMT

பொள்ளாச்சி

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு கறிக்கோழி கொள்முதல் விலை குறைந்துவருவதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கறிக்கோழி கொள்முதல்

தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் தினமும் 15 லட்சம் கறிக்கோழி வரை உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கேரளா கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில், தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது, ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு சராசரியாக ரூ.96 வரை செலவாகிறது. கடந்த மாதம் 20-ந்தேதி ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.102 ஆக இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கு முன் புரட்டாசி மாதம் துவங்கியதில் இருந்து கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து சிறிது, சிறிதாக குறையத் தொடங்கியது.

கிலோவிற்கு ரூ.18 நஷ்டம்

29-ந்தேதி முதல் ஒரு கிலோ கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலை (விற்பனை விலை) ரூ.85, தற்போது ரூ.78- ஆக உள்ளது.

இதனால் உற்பத்தியாளர்களுக்கு கிலோவிற்கு ரூ.18 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது இறைச்சி கடைகளில்ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.160முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் விலை மாற்றம் காணப்படுகிறது. இதுகுறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:- புரட்டாசி மாதங்களில் இந்துக்கள் பெரும்பாலோனர் அசைவம் சாப்பிடுவதில்லை. இதனால், நுகர்வு சரிந்து கொள்முதல் விலை குறைந்து உள்ளது. இன்னும் 2 வாரத்தில் புரட்டாசி மாதம் முடிந்தவுடன் நுகர்வு அதிகரித்து கொள்முதல் விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்