வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 9-ந் தேதி (புதன்கிழமை) உருவாகக்கூடும், இதனால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-11-05 00:03 GMT

சென்னை,

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்துக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கும், சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அனேக இடங்களில் இடி- மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்றும், நாளையும் கனமழை

அதேபோன்று, இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

இதனைத் தொடர்ந்து வருகிற 9-ந் தேதி (புதன்கிழமை) தென்மேற்கு வங்க கடல் பகுதியில், இலங்கையை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது; அது 10 மற்றும் 11-ந் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்துக்கு மீண்டும் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது; காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதியை நோக்கி நகரும்போதுதான் அது எந்த பகுதிக்கு வரும், அதன் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்பது பற்றி தெரியவரும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்கள், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு வருகிற 8, 9-ந் தேதிகளில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி முதல் நேற்று வரையிலான நிலவரப்படி, இயல்பைவிட 4 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தண்டையார்ப்பேட்டை 14 செ.மீ., டி.ஜி.பி. அலுவலகம், மேட்டுப்பாளையம் தலா 12 செ.மீ., வேதாரண்யம், காயல்பட்டினம் தலா 10 செ.மீ., பெரம்பூர் 9 செ.மீ., கயத்தாறு, கடம்பூர், சென்னை கலெக்டர் அலுவலகம், ஸ்ரீவைகுண்டம் தலா 8 செ.மீ., அயனாவரம் தாலுகா அலுவலகம், அண்ணா பல்கலைக்கழகம், அம்பத்தூர், சென்னை நுங்கம்பாக்கம், செங்குன்றம், கடலூர் கலெக்டர் அலுவலகம் தலா 7 செ.மீ., கோடியக்கரை, நாங்குநேரி, வத்திராயிருப்பு, திருத்துறைப்பூண்டி, ஆவடி, பேச்சிப்பாறை, திருவள்ளூர், திருப்பதிசாரம் தலா 6 செ.மீ., தூத்துக்குடி, முத்துப்பேட்டை, திருக்கோவிலூர், குடிதாங்கி, பர்லியார், நத்தம், திருவாலங்காடு பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்