காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கரூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை ெசய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
காதல் திருமணம்
கரூர் மாவட்டம், திருக்காடுதுறை பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் பூபேஸ் (வயது 32). இவர் நாமக்கல் மாவட்டம் ராமதேவம் பகுதியில் பால் வேன் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகள் காயத்ரிக்கும், பூபேஸ்க்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
தங்கநகை கேட்டு வற்புறுத்தல்
பின்னர் திருக்காடுதுறையில் உள்ள பூபேசின் வீட்டில் குடியிருந்து வந்தனர். பூபேஸ் திருக்காடுதுறை நீரேற்று பாசன நிலையத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். காயத்ரி திருக்காடுதுறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு மிதுன் (3) என்ற குழந்தை உள்ளது.
இந்நிலையில் பூபேஸ் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி காயத்ரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது மனைவியின் பெற்றோர்களிடம் தங்கநகை வாங்கி வருமாறு அடிக்கடி வற்புறுத்தி உள்ளார்.
தற்கொலை
இதையடுத்து காயத்ரி தனது பெற்றோர்களிடம் இருந்து கடந்த 4 மாதத்திற்கு முன்பு 4½ பவுன் தங்கசங்கிலி வாங்கி வந்து கொடுத்துள்ளார். அதேபோல் நேற்று காலையும், கணவன் மனைவிக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட காயத்ரி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற பூபேஸ் அங்கு வந்து காயத்ரியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு காயத்ரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உதவி கலெக்டர் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த காயத்ரியின் தாய் இளையம்மாள், சகோதரர் சசிகுமார் மற்றும் உறவினர்கள் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் சசிகுமார் தனது சகோதரி சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் புகார் ெகாடுத்தார்.
அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். காயத்ரிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் கரூர் உதவி கலெக்டர் ரூபினாவும் விசாரணை நடத்தி வருகிறார்.