வடமாநில வாலிபரை காதல் திருமணம் செய்த பெருந்துறை இளம்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை
பெருந்துறை இளம்பெண்ணை காதல் திருமணம் செய்த வடமாநில வாலிபர் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து உள்ளார். இதுபற்றி சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
பெருந்துறை
பெருந்துறை இளம்பெண்ணை காதல் திருமணம் செய்த வடமாநில வாலிபர் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து உள்ளார். இதுபற்றி சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
காதல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த துடுப்பதி அருகே உள்ள பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருடைய மகள் சுமித்ரா (வயது 23).
இதேபோல் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சுப்ரதாஸ் (27). இவர் ஈரோடு மாவட்டம் பாலக்கரை அருகே உள்ள தனியார் நிறுவனத்துக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்து தொழிலாளியாக வேலை செய்து வந்து உள்ளார். அப்போது சுப்ரதாசுக்கும், சுமித்ராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
திருமணம்
இதன்காரணமாக 2 பேருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனால் சுப்ரதாசின் பேச்சில் மயங்கி, அவரை நம்பி கொல்கத்தாவுக்கு சுமித்ரா சென்றார். பின்னர் அங்கு அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கொல்கத்தாவுக்கு சென்ற பிறகு தன்னை தேட வேண்டாம் என்றும், தான் காதல் கணவனுடன் சேர்ந்து கொல்கத்தாவில் வாழ்க்கை நடத்தி வருவதாகவும், பாலக்கரையில் உள்ள பெற்றோருக்கு செல்போனில் சுமித்ரா தகவல் தெரிவித்து உள்ளார். இதனால் சுமித்ராவை தேடும் வேலையில் அவருடைய பெற்றோர் ஈடுபடவில்லை.
அடைத்து வைத்து சித்ரவதை
இந்நிலையில், 'கடந்த சில நாட்களாக தான் கொல்கத்தாவில் உள்ள சுப்ரதாஸ் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும், தினந்தோறும் தனது கணவர் தன்னை அடித்து கொடுமை படுத்துவதாகவும், அவருடைய சித்ரவதையில் இருந்து தன்னையும், தனது 2 வயது மகனையும் காப்பாற்ற வேண்டும் என்றும்,' சுபத்ரா யூ டியூப் வலைதளம் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தனிப்படை விரைவு
இதுபற்றி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சசிமோகன் கவனத்துக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகத்தை தொடர்பு கொண்டு, வீட்டில் அடைக்கப்பட்டு உள்ள சுமித்ராவை கொல்கத்தாவில் இருந்து மீட்டு பெருந்துறைக்கு அழைத்து வரும்படி உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் சுமித்ராவை மீட்டு வருவதற்காக பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்தானம் தலைமையிலான தனிப்படை போலீசார் கொல்கத்தாவுக்கு விரைந்து உள்ளனர்.
இந்த சம்பவம் பெருந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.