பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு இறந்ததால் காதல் கணவரும் தற்கொலை

இதய நோய்க்கு தனது 3 மாத குழந்தை பலியான வேதனையில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு இறந்த சோகத்தில் காதல் கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-12 23:47 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குண்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜலபதி (வயது 30), லாரி டிரைவர். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்குவாரியில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

அப்போது ஜலபதிக்கும், குமரி மாவட்டம் கீழ் காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த சாம் ராபின்சன் என்பவரின் மகள் அபிசால்மியா (25) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது.

என்ஜினீயரிங் படித்திருந்த அபிசால்மியா தான் என்ஜினீயர் என்றாலும், முகநூலில் பழகிய லாரி டிரைவர் ஜலபதியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இருவரும் அன்பாக பேசி வந்தனர். இதையடுத்து சில நாட்களில் நட்பு காதலாக மாறியது. காதல் விவகாரம் பெண் வீட்டுக்கு தெரியவரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருமணம்

ஆனால் காதலில் தீவிரமாக இருந்த அபிசால்மியா கடந்த 2021-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால் அவர்கள் விருப்பப்படி சேர்ந்து வாழ போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் குழந்தைக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி இதய நோய் குறைபாட்டால் குழந்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்தது.

தற்கொலை

குழந்தை இறந்ததால் வேதனை அடைந்த அபிசால்மியா யாரிடமும் சரிவர பேசாமல் வேதனையில் இருந்து வந்தார். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த அவர் கடந்த 6-ந்தேதி இரவு தனது கணவரின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்தநிலையில், குழந்தை இறந்த துக்கம் ஒருபுறம், ஆசை, ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி தற்கொலை செய்து கொண்டது மற்றொருபுறம் என வேதனையின் உச்சத்தில் ஜலபதி இருந்தார். இதனால் விபரீத முடிவாக நேற்று முன்தினம் ஜலபதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்