கபடி களத்தில் காதல் மலர்ந்தது: பட்டதாரி பெண் காதலருடன் போலீசில் தஞ்சம்
கபடி களத்தில் காதல் மலர்ந்த நிலையில், பட்டதாரி பெண் காதலருடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே உள்ள தோரமங்கலம் கொடையன் தெருவை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மகன் சிவக்குமார் (வயது 23). கபடி வீரர். தாரமங்கலம் துட்டம்பட்டி கிழக்கு மேடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகள் சத்யா (23). பட்டதாரியான இவர், கபடி வீராங்கனை ஆவார். இவர்கள் 2 பேரும் மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளனர். இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கபடி விளையாட சென்ற இடத்தில் சிவக்குமாரும், சத்யாவும் சந்தித்து கொண்டனர். அப்போது கபடி களத்தில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பின்பு அவர்கள் 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் சத்யாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிவக்குமார், சத்யா நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினர். நேற்று காலை அவர்கள் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சத்யா, தனது காதல் கணவருடன் தாரமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தார். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேசி, சமாதானப்படுத்தினர். மேலும் சத்யாவை, சிவக்குமாருடன் அனுப்பி வைத்தனர்.