காதல் விவகாரம்: துப்பாக்கி முனையில் மருத்துவக் கல்லூரி மாணவருக்கு மிரட்டல் - சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே பரபரப்பு
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே, துப்பாக்கி முனையில் மருத்துவக் கல்லூரி மாணவரை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை,
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரோகன் என்பவர், சென்னை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆர்த்தோ முதுநிலை பட்டம் படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் வகுப்பை முடித்துவிட்டு விடுதிக்கு திரும்பியுள்ளார்.
அப்போது, சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், திடீரென ரோகன் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார். அப்போது பயத்தில் அவர் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் சுதாரித்துக் கொண்டு துப்பாக்கி வைத்து மிரட்டிய நபரை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பான விசாரணையில், பிடிபட்ட நபர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ரித்திக் குமார் என தெரியவந்தது. மேலும் தப்பியோடிய அவரது நண்பர் அமித்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அமித்குமாரை காதலித்து வந்த பெண், அவரை தவிர்த்துவிட்டு ரோகனுடன் பழகி வந்ததால், ஆத்திரமடைந்த அமித்குமார், தனது நண்பர் ரித்திக்குமாருடன் சேர்ந்து, ரோகனை துப்பாக்கி முனையில் மிரட்டியது தெரிய வந்தது.