நாகூர்:
நாகூர் யானை கட்டி முடுக்கு சந்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், நாகூர் பெரியார் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது(வயது 43) என்பதும், அவர் லாட்டரி சீட்டுகள் விற்றதும் தெரிய வந்ததது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகுல் ஹமீதை கைது செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.