தொம்பரகாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கண்ணாடி பார லாரி கவிழ்ந்தது-டிரைவர் படுகாயம்
நல்லம்பள்ளி:
தொம்பரகாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கண்ணாடி பார லாரி கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் படுகாயம் அடைந்தார்.
கண்ணாடி பார லாரி
பெங்களூருவில் இருந்து கண்ணாடி பாரம் ஏற்றி கொண்டு கேரள மாநிலத்திற்கு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிச்சாண்டி (வயது 47) என்பவர் ஓட்டி சென்றார். நேற்று முன்தினம் இரவு இந்த லாரி தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தொம்பரகாம்பட்டி பகுதியில் சென்றது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் தாறுமாறாக ஓடி, அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் பிச்சாண்டி படுகாயம் அடைந்தார். மேலும் லாரியில் இருந்த கண்ணாடிகள் சாலையில் விழுந்து நொறுங்கின. விபத்தால் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் படுகாயம் அடைந்த டிரைவர் பிச்சாண்டியை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மீட்பு குழுவினர் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து சாலையில் சிதறி கிடந்த கண்ணாடிகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.