நாமக்கல்லில் திருடிய லாரி சேலத்தில் மீட்பு

நாமக்கல்லில் திருடப்பட்ட லாரி சேலத்தில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

Update: 2023-05-06 20:04 GMT

கன்னங்குறிச்சி

நாமக்கல்லில் திருடப்பட்ட லாரி சேலத்தில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

லாரி மீட்பு

சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு சின்னமுனியப்பன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த டாரஸ் லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் பெங்களூரு அருகே உள்ள கோரமங்கலா பகுதியை சேர்ந்த முகமது கரிமுல்லா (வயது 37) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார். தொடர்ந்து விசாரித்ததில் முகமது கரிமுல்லா இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து மேலும் விசாரித்தனர். அவரிடம் இருந்து லாரி மீட்கப்பட்டது.

அழைத்து சென்றனர்

இதுதொடர்பாக பள்ளிப்பாளையம் போலீசாருக்கு உடனே தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பள்ளிப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார் சேலம் விரைந்து வந்தனர். அவர்களிடம் முகமது கரிமுல்லாவை போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை போலீசார் பள்ளிப்பாளையம் அழைத்து சென்றனர்.

மேலும் அவர் நாமக்கல்லை சேர்ந்த ரமேஷ் என்பவரது லாரியை திருடி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்