டேங்கர் லாரி கவிழ்ந்து தொழிலாளி உடல் நசுங்கி பலி

குத்தாலம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து தொழிலாளி உடல் நசுங்கி பலியானார். இதனால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-06 17:04 GMT

குத்தாலம், ஜூன்.7-

குத்தாலம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து தொழிலாளி உடல் நசுங்கி பலியானார். இதனால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொழிலாளி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கங்காதரபுரம் ஆட்டூர் கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் முருகானந்தம்(வயது 28). விவசாய கூலித் தொழிலாளியான இவர் நேற்று மாலை வேலை முடிந்த பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.மேலஅய்யனார்குடி என்ற இடத்தில் உள்ள நக்கம்பாடி ஊராட்சி அலுவலகம் அருகே அவர் சென்றபோது அவருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. இதனால் முருகானந்தம் தனது‌ மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தி விட்டு பேசிக்கொண்டு இருந்தார்.

டேங்கர் லாரி கவிழ்ந்தது

அப்போது கும்பகோணத்தில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி சென்ற டேங்கர் லாரி ஊராட்சி அலுவலகம் எதிரே திடீரென நிலை தடுமாறிமுருகானந்தம் மீது கவிழ்ந்தது.இதில் டேங்கர் லாரிக்கு அடியில் சிக்கிய முருகானந்தம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே சம்பவ இடத்தில் இருந்து டிரைவர் தப்பி ஓடி விட்டார்.மேலும் சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து டீசல் வெளியேறி சாலையின் இருபுறமும் ஓடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

2 மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்பு

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாலையூர் போலீசார் மற்றும் மயிலாடுதுறை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியை 2 பொக்லின் எந்திரங்கள் மூலம் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி பாதுகாப்பாக மீட்டனர்.பின்னர் முருகானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாலைமறியல்

இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த முருகானந்தத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முருகானந்தம் குடும்பத்துக்கு தகுந்த இழப்பீடு வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உயிரிழந்த முருகானந்தத்துக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்