கபிலர்மலை அருகே மின் கம்பியில் உரசியதால்தேங்காய் நார் பார லாரி தீப்பிடித்தது

Update: 2023-04-28 18:45 GMT

பரமத்திவேலூர்:

கபிலர்மலை அருகே மின் கம்பியில் உரசி தேங்காய் நார் பார லாரி தீப்பிடித்தது.

லாரியில் தீப்பிடித்தது

பரமத்திவேலூர் தாலுகா கபிலர் மலை அருகே உள்ள கபிலக்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 41). இவர் அந்த பகுதியில் தேங்காய் நார் மில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருடைய தொழிற்சாலைக்கு நேற்று மாலை இருகூர் பகுதியில் இருந்து தேங்காய் நார்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

இந்த லாரி கபிலக்குறிச்சி அருகே வலசுப்பாளையம் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக தாழ்வாக சென்ற மின்கம்பியில், தேங்காய் நார் உரசியது. இதனால் அதில் தீப்பிடித்து எரியதொடங்கியது.

ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்

இதனை கவனித்த டிரைவர் லாரியில் இருந்து உடனடியாக இறங்கி தப்பினார். மேலும் அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். தொடர்ந்து கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தேங்காய் நாரில் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் லாரியில் தீப்பிடிப்பது தவிர்க்கப்பட்டது. இருப்பினும் லாரியில் இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் நார் தீயில் எரிந்துநாசமானது.

பரபரப்பு

இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கம்பியில் உரசி தேங்காய் நார் பாரம் ஏற்றி சென்ற லாரியில் தீப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்