நல்லம்பள்ளி:
ஆந்திர மாநிலத்தில் இருந்து காலி பாட்டில்களை ஏற்றி கொண்டு ஒரு லாரி கேரள மாநிலம் திருச்சூருக்கு புறப்பட்டது. லாரியை ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த விஜயகுமார் (வயது 37) என்பவர் ஓட்டி சென்றார். இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று, இந்த லாரி மீது மோதியது. இதில் காலி பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் விஜயகுமார் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.