நூதன முறையில் லாரி உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை
திருவள்ளூர் அருகே நூதன முறையில் லாரி உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.;
லாரி உரிமையாளர்
திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 56). லாரி உரிமையாளர். இந்த நிலையில் நேற்று முருகேசன் திருமழிசை பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அவர் திருமழிசை சாலையில் வந்து கொண்டிருந்தபோது, முன்னால் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் முருகேசனிடம் உங்களது 50 ரூபாய் சாலையில் விழுந்து கிடக்கிறது என்று தெரிவித்தார். இதை உண்மை என்று நம்பிய முருகேசன் ரூ.50-ஐ எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பிச் சென்றார். அப்போது அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தான் கொண்டு வந்த ரூ.2 லட்சத்தை பையுடன் மோட்டார் சைக்கிளில் முன்புறம் மாட்டிவிட்டு சென்று ரூ.50-ஐ எடுத்தார்.
ரூ.2 லட்சம் திருட்டு
கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் திடீரென மோட்டார் சைக்கிளில் மாட்டி இருந்த ரூ.2 லட்சத்தை பையுடன் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த முருகேசன் இது குறித்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் தெரிகிறதா என்று விசாரித்து வருகிறார்கள்.