முத்தையாபுரத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கோரிக்கை
முத்தையாபுரத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியில் நேற்று பரவலாக மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் தோப்பு முஸ்லிம் தெருவில் உள்ள ரேஷன் கடை, பள்ளிக்கூடம் அருகே மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஸ்பிக் நகர், முத்தையாபுரம் பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் வடிந்து செல்ல வழி இல்லாமல் தேங்கி உள்ளது. அந்தபகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஸ்பிக் நகரில் இருந்து அத்திமரப்பட்டிக்கு செல்லும் சாலை இருபுறமும் சகதிகாடாக காட்சியளிக்கிறது. இப்பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.