உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்தாய்வு கூட்டம்

பாரத பிரதமர் வீடு கட்டும் திட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

Update: 2023-05-04 18:45 GMT

திருக்கடையூர்:

பாரத பிரதமர் வீடு கட்டும் திட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

கலந்தாய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட ஆக்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ஆக்கூர், மடப்புரம், காளஹஸ்திநாதபுரம், திருக்கடையூர், காளியப்பநல்லூர், கிடங்கல் ஆகிய ஊராட்சிகளில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:

பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 33,000 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் 25,000 வீடுகள் பணிகள் முடிவுற்றும், நடைபெற்றும் வருகின்றன. இதில் 8000 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகள் கட்டப்படாமல் உள்ளன. செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் 1942 வீடுகள் பணிகள் தொடங்காமல் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவர்கள் வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்களிடம் அறிவுறுத்த வேண்டும்.

பாரத பிரதமரின் வீடுகள் ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள் ஏதேனும் இடையூறுகள், கட்டுமான பொருட்களுக்கும் (மணல்,செங்கல்) இடையூறு இருந்தால் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம். உடனடியாக நிவர்த்தி செய்து தரப்படும்.

ஆய்வு

இன்னும் ஒரு மாத காலத்திற்குள் வீடு ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள் தங்களுடைய வீடு கட்டும் பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார்.

முன்னதாக ஆக்கூர் ஊராட்சியில் உள்ள உடையார் கோவில் பத்து கிராமத்தில் நடைபெற்று வரும் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி, ஊரக வளர்ச்சித் துறையினர், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்