உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
நிலுவை தொகை செலுத்தாத உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரம்பலூர்
அரசுக்கு பண இழப்பு
அரசு கேபிள் டி.வி. தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் பலனாக தற்போது புதிதாக பல உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களும், கட்டண சேனல்களும் கூடுதலாக வழங்கப்பட்டு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தற்போது அரசு கேபிள் இணைப்பு கோரும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கைகளில் செயலாக்கத்தில் இல்லாத அரசு செட்டாப் பாக்ஸ்கள் கணிசமான எண்ணிக்கையிலேயே உள்ளன. இதனால் அரசு கேபிள் இணைப்பு கோரும் அனைத்து பொதுமக்களுக்கும் கேபிள் இணைப்பு வழங்க இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், அரசுக்கு இதனால் கணிசமான அளவில் பண இழப்பும் ஏற்படுகிறது. எனவே, 3 மாதங்களுக்கு மேல் செயலாக்கத்தில் இல்லாத அரசு செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்கள் கண்டிப்பாக அந்தந்த உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஒப்படைக்க வேண்டும்
அரசு இலவசமாக வழங்கும் செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் அல்லது அதனை கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கப்படும் செட்டாப் பாக்ஸ்களை தேவைக்கேற்ப உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உடனடியாக செயலாக்கம் செய்யப்பட்டு புதிய இணைப்புகள் கோரும் பொதுமக்களுக்கு வழங்கப்படும். எனவே, 3 மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தாத நிலையில் இருக்கும் அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். பயன்படுத்தாமல் அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ்களை வைத்திருக்கும் நபர்களை கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நேரில் சந்தித்து உடனடியாக செட்டாப் பாக்ஸ்களை திரும்ப பெற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன துணை மேலாளர் அலுவலகத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
தவறும் பட்சத்தில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் செயலுக்காக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கீழ் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களாக உரிமம் பெற்று தொழில் செய்து வருகின்ற உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் இதுநாள் வரை செலுத்தாமல் உள்ள ரூ.1 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 946 அனலாக் நிலுவை தொகையை அனைத்து உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் உடனடியாக செலுத்த வேண்டும். மீறினால் சம்பந்தப்பட்ட உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.