தமிழ்நாடு உள்ளாட்சி இடைத்தேர்தல்; விறுவிறு வாக்குப்பதிவு

தமிழ்நாடு உள்ளாட்சி இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-07-09 04:13 GMT

சென்னை,

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 20 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 40 கிராம ஊராட்சி தலைவர், 436 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கும், 2 மாநகராட்சி வார்டு உறுப்பினர், 2 நகராட்சி வார்டு உறுப்பினர், 8 பேரூராட்சி வார்டு உறுப்பினர் என 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கும் என மொத்தம் 510 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து பதவி இடங்களுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறும். ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்கள் கட்சி அடிப்படையில் அல்லாமல் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1,022 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 19 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,041 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கு வாக்குச்சீட்டுகளும் வாக்குப்பதிவுக்கு நடைபெற்று வருகிறது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 12-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்