தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் - கலெக்டர் தகவல்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் கடன்கள் பெற்று பயனடையலாம். இதுக்குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-06-02 12:26 GMT

காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுய உதவிக்குழு கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன்கார்டு நகல், நிலவுடமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பான கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி கடன் மனு அளித்து பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.

கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தினை பெற்று உரிய பங்குத்தொகை மற்றும் நுழைவு கட்டணம் செலுத்தி உடன் உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை அளித்து, அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்