உணவு பொருட்கள் பதப்படுத்தும் தொழில் தொடங்க மானியத்துடன் கடன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதமரின் சுயதொழில் திட்டத்தின்கீழ் உணவுப்பொருட்கள் பதப்படுத்தும் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-16 18:45 GMT


மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதமரின் சுயதொழில் திட்டத்தின்கீழ் உணவுப்பொருட்கள் பதப்படுத்தும் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மானியத்துடன் கடன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டத்தின்கீழ் உணவுபொருட்கள் பதப்படுத்தும் தொழில் தொடங்கவும், ஏற்கெனவே நடத்தப்படும் குறுந்தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்துதலுக்கு கடனுதவி பெறலாம்.

இந்த திட்டத்தில் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், ஊறுகாய், வற்றல், அரிசி ஆலை, உலர் மாவு, உணவு எண்ணெய் பிழிதல், மரச்செக்கு எண்ணெய், பேக்கிரி பொருட்கள், மசாலா பொருள்கள் தயாரித்தல், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் மீன்வகைகள் பதப்படுத்துதல் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.1 கோடி வரை...

ரூ.1 கோடி வரையிலான திட்ட தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் உதவி பெறுவதற்கு தகுதி பெற்றவையாகும். திட்ட தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தனது பங்காக செலுத்த வேண்டும்.

90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லாக் கடனாக வழங்கப்படும். அரசு மானியமாக 35 சதவீதம், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடும் சுய உதவிகுழுவினர் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்கநிலை மூலதனமாக வழங்கப்படும்.

இணையதள விண்ணப்பம்

இந்த திட்டத்தில் பயன்பெற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்யவேண்டும். தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பயன்பெறலாம்.

திட்டம் தொடர்பாக மேலும் விவரங்களை அறிந்துகொள்ள கச்சேரிசாலை, செந்தில் பைப் வளாகம், இரண்டாம் தளம், மாவட்ட தொழில் மையம் (போன்: 04364-212295) மயிலாடுதுறை அலுவலகத்தை அணுகி அறிந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்