பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மக்களுக்கு கடன் வழங்கும் முகாம்-கலெக்டர் விஷ்ணு தகவல்

நெல்லை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மக்களுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

Update: 2022-12-08 19:35 GMT

நெல்லை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மக்களுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

சிறுபான்மையின மக்கள்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சிறு-குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன் மற்றும் ஆண், பெண் குழுக்கள் கடன் ஆகிய கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மத வழி சிறுபான்மையினரான கிறிஸ்தவர், முஸ்லிம்கள், பவுத்தர், சமணர், பார்சி மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மக்கள் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலை விரிவுபடுத்தவும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் வழங்கப்படுகிறது.

முகாம்கள்

இந்த திட்டங்கள் தொடர்பான விவரங்களையும், சந்தேகங்களையும் தெளிப்படுத்திக் கொள்ளவும், கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் முகாம்கள் நடைபெற உள்ளது.

அதன்படி நெல்லை சந்திப்பு கூட்டுறவு வங்கியில் வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) விண்ணப்பங்களை பெறுவதற்கான முகாம் நடைபெறுகிறது.

இதே போல் 15-ந் தேதி நெல்லை நகர கூட்டுறவு வங்கி, 17-ந் தேதி பாளையங்கோட்டை கூட்டுறவு நகர வங்கி, 20-ந் தேதி கல்லிடைக்குறிச்சி கூட்டுறவு நகர வங்கி, 23-ந் தேதி வீரவநல்லூர் கூட்டுறவு நகர வங்கி, 28-ந் தேதி அம்பை கூட்டுறவு நகர வங்கியில் முகாம்கள் நடைபெறுகிறது.

இந்த முகாமில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்