நாமக்கல் (வடக்கு) அரசு மேல்நிலைப்பள்ளியில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன்உதவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக 115 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1,495 உறுப்பினர்களுக்கு ரூ.11 கோடியே 40 லட்சம் மதிப்பிலான கடன் உதவி மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் கவிஞருக்கு மார்பளவு சிலை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் அவரது மார்பளவு சிலை அமைக்க வேண்டுமென்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அவரது மார்பளவு சிலை அமைக்க நிதி ஒதுக்கி, அரசாணை பிறப்பித்து உள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதேபோல் புதுச்சத்திரத்தில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் டாக்டர் சுப்பராயனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அரங்கம் அமைக்கும் பணிக்கு முதல்-அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சிகளில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, நகராட்சி கவுன்சிலர்கள் சிவக்குமார், நந்தகுமார், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி பாண்டியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.