தகுதியான தொழில்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும்

தகுதியான தொழில்களுக்கு கடனுதவி வழங்க முன்வர வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த சுய வேலைவாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் வங்கியாளர்கள் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.

Update: 2022-09-18 18:45 GMT

தகுதியான தொழில்களுக்கு கடனுதவி வழங்க முன்வர வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த சுய வேலைவாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் வங்கியாளர்கள் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.

விழிப்புணர்வு கருத்தரங்கு

தர்மபுரி மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான சுய வேலைவாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கண்காட்சி தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கை கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 9 தொழில் முனைவோருக்கு ரூ.87 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.3 கோடியே 99 லட்சம் கடனுதவிகளை வழங்கினார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

அரசு சுயதொழில் செய்பவர்களுக்கு மானியத்துடன் வங்கி கடனுதவி, பலவிதமான சலுகைகளை அளித்து வருகிறது. மாவட்ட தொழில் மையம் பல்வேறு தொழில் வாய்ப்புகளுக்கு தேவையான கடனுதவிகளை மானியத்துடன் வழங்குகிறது. படித்த இளைஞர்கள் வேலை தேடுவதைவிட பிறருக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பை உருவாக்குகின்ற தொழில் முனைவோர்களாக தங்களை உருவாக்கி கொள்ள வேண்டும்.

முழு ஒத்துழைப்பு

ஒரு சில வங்கிகள் தொழில் முனைவோரின் கடனுதவி கோரிக்கை விண்ணப்பங்களை பெற்று பரிசீலிக்காமல் தவிர்த்து விடும் நிலை உள்ளது. தகுதியான தொழில்களுக்கு வங்கியாளர்கள் கடனுதவி வழங்க முன்வர வேண்டும். தொழில் வளர்ச்சி பெறும் மாவட்டமாக தர்மபுரி உருவாக வங்கியாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கருத்தரங்கில் தர்மபுரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், கடகத்தூர் குறு சிறு தொழில் நிறுவனங்கள் சங்க தலைவர் சரவணன், தாட்கோ மாவட்ட மேலாளர் சிட்டிபாபு, பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் கதிர் சங்கர், இந்தியன் வங்கி சுய வேலை பயிற்சி நிறுவன இயக்குனர் புவனேஸ்வரி, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தர்மபுரி கிளை மேலாளர் மகேஸ்வரன், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் வாசுகி மற்றும் அரசு அலுவலர்கள், தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்