4,838 பேருக்கு எழுத்தறிவு வகுப்புகள்

15 வயதுக்கு மேற்பட்ட 4,838 பேருக்கு செப்டம்பர் 1-ந் தேதி முதல் எழுத்தறிவு வகுப்புகள் தொடங்க உள்ளது என்று பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Update: 2023-08-01 18:45 GMT

15 வயதுக்கு மேற்பட்ட 4,838 பேருக்கு செப்டம்பர் 1-ந் தேதி முதல் எழுத்தறிவு வகுப்புகள் தொடங்க உள்ளது என்று பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்தார்.

புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

நாகூரில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த கல்வி அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குனர் பழனிச்சாமி கலந்துகொண்டு பேசும் போது கூறியதாவது:-

2022-27-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ண அறிவு பெறாதவர்கள் இல்லை என்கிற நிலையை உருவாக்குவது புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் நோக்கம் ஆகும்.

வகுப்புகள்

அதன்படி நாகை மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் 610 ஆண்களும், 4,716 பெண்களும் என மொத்தம் 5,326 பேர் இந்த திட்டத்தின் மூலம் எழுத்தறிவு பெற்றுள்ளனர். வரும் 2024-ம் ஆண்டில் 4,838 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் எழுத்தறிவு வகுப்புகள் தொடங்க உள்ளது.

இந்த வகுப்புகளில் கற்போர்களின் வசதிக்கேற்ப ஓய்வு நேரங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், மாலை நேரங்களிலும் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 2 மணி நேரம்

இந்த வகுப்புகள் வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 100 நாட்களில் ஒரு நாளுக்கு 2 மணி நேரம் என 200 மணி நேரம் கற்பித்தல் பணி நடக்கும். இதில் கற்போருக்கு மதிப்பீடு தேர்வு நடத்தப்பட்டு, மாநில அரசின் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. 242 கல்வி தன்னார்வலர்கள் மூலம் இந்த எழுத்தறிவு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என்றார்.

தொடர்ந்து கூட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் நோக்கம், கற்பிக்கும் தன்னார்வலர்கள் குறித்த விவரங்கள், கற்பிக்கும் மையங்கள், தன்னார்வலர் ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடிய பயிற்சிகள், திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க ஒன்றிய அளவில் மாதாந்திர ஆய்வுக் கூட்டங்கள் நடத்துதல், எழுத்தறிவு மையங்களை கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் பார்வையிடுதல், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்கள் எவரும் இல்லை என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுதல், எவரேனும் எழுத, படிக்கத் தெரியாதவர்கள் இருந்தால் கற்றல் மையங்களில் சேர்த்து அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கொடுக்க வேண்டும் என்பது குறித்து அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்