இலை, தழைக்குள் மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்தியவர் கைது
நாகை அருகே இலை, தழைக்குள் மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை அருகே இலை, தழைக்குள் மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
மது கடத்தல்
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை மாவட்ட பகுதிகள் வழியாக மதுபாட்டில்கள், சாராயம் கடத்தப்படுவது தொடர்ந்து நடக்கிறது. இதை தடுக்க மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வருகிறார்கள்.
நாகை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் தலைமையில் போலீசார் நாகை அருகே சங்கமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது ஒருவர் ஸ்கூட்டரில் ஆடுகளுக்கு தீவனமாக பயன்படும் இலை, தழைகளை கட்டிக்கொண்டு வந்தார்.
காரைக்காலில் இருந்து...
அவரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். இதில் இலை, தழைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாக்குப்பையில் மதுபாட்டில்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் செல்லூரை சேர்ந்த பாதர்வெல்லையன் (வயது59) என்பதும், ரூ.10 ஆயிரம் மதிப்புடைய மதுபாட்டில்களை புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து ஸ்கூட்டரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ததுடன், மதுபாட்டில்கள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். மது, சாராயம் கடத்துபவர்கள் போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இலை, தழைக்குள் மதுபாட்டில்களை மறைத்து வைத்து நூதன முறையில் மது கடத்தியவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.