மதுக்கடைகளை அடைத்துவிட்டு கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும் -அண்ணாமலை பேட்டி
மதுக்கடைகளை அடைத்துவிட்டு கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும் அண்ணாமலை பேட்டி.
திருச்சி,
திருச்சி திருவானைக்காவலில் நேற்று பா.ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மின்சார திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழக மின்துறையில் நடைபெறும் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துவிடும். ஆவின் நிறுவனம் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை உற்பத்தி செய்து வருவாயை பெருக்கமுயற்சி செய்யாமல் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தி உள்ளனர். தமிழகத்தில் மதுக்கடைகளை அடைத்துவிட்டு கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
இந்தியாவில் சமூக சீர்த்திருத்ததிற்காக பெரியார் போன்று பலர் பாடுபட்டுள்ளார்கள். ஆனால், அவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார்கள். பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் உள்ளிட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களுக்கு சிலை வைப்போம். பெரியாரின் சிலைக்கு பா.ஜனதா கட்சியினரால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.