மதுபான விற்பனை 100 சதவீதம் ஒழுங்குபடுத்தப்படும்

மதுபான விற்பனை 100 சதவீதம் ஒழுங்குபடுத்தப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

Update: 2023-06-24 21:17 GMT

மதுபான விற்பனை 100 சதவீதம் ஒழுங்குபடுத்தப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

மீண்டும் ஆய்வு

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஈரோட்டில் நேற்று நடந்தது. முகாமில் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கோவில், பள்ளிக்கூடங்கள் அருகில் டாஸ்மாக் கடைகள் இருந்தால், அந்த கடையின் வருவாயை கணக்கிடாமல் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் பிரச்சினைக்குரிய டாஸ்மாக் கடைகள் தொடர்பாக மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கூடுதல் விலை

டாஸ்மாக் கடைகளில் வேலை பார்க்கும் பணியாளர்களும் சிரமப்படுகின்றனர். குறுகிய இடத்தில் மதுபானங்களையும் வைத்து கொண்டு விற்பனை செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது குறைபாடுகளை கேட்டறிந்தோம்.

கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒருசில கடைகளில் மட்டும் தவறு நடக்கிறது. எல்லா இடங்களிலும் தவறு நடப்பதில்லை. அதிக பணம் வாங்குவதாக கூறும் புகாரை பணியாளர்களும் அவமானமாக நினைக்கின்றனர். அவர்களது சிரமத்தை கேட்கும்போது நமக்கே கஷ்டமாக இருக்கிறது. மதுபான விற்பனை 100 சதவீதம் ஒழுங்குபடுத்தப்படும். அதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். இந்த பேட்டியின்போது ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்