டாஸ்மாக் கடை கேட்டு மதுப்பிரியர்கள் மறியல்
கொடைக்கானல் அருகே டாஸ்மாக் மதுபான கடை அமைக்கக்கோரி மதுப்பிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
9 டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல் மதுபான கடையை மூடக்கோரி பெண்கள், மாணவ-மாணவிகள் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மதுபான கடை கேட்டு மதுப்பிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் கொடைக்கானல் அருகே நடந்தது. சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் நகர்ப்பகுதி மற்றும் மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் 9 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன.
பெண்கள் போராட்டம்
இதில் கொடைக்கானல் பெருமாள்மலை மலைக்கிராமத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சமீபத்தில் பெண்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். அதைத்தொடர்ந்து பெருமாள்மலை கிராமத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.
இதன் எதிரொலியாக, மதுபானம் கிடைக்காமல் கொடைக்கானல் நகர்ப்பகுதி மற்றும் பிற பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு மதுப்பிரியர்கள் சென்றனர். மேலும் பெருமாள்மலை கிராமத்தில் தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. அங்கு கூடுதல் விலைக்கு மதுபானம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மதுப்பிரியர்கள் மறியல்
இந்தநிலையில் பெருமாள்மலையில், பழனி செல்லும் மலைப்பாதையில் நேற்று மாலை 10-க்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் காலி பேரலை வைத்து தடை ஏற்படுத்தினர்.
அப்போது அவர்கள், பெருமாள்மலையில் டாஸ்மாக் கடை இல்லாததால் தனியார் மதுபான விடுதியில் கூடுதல் விலைக்கு மதுபானம் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் தங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாக குற்றம்சாட்டி இந்த மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் அங்கு வந்த பொதுமக்கள், மதுப்பிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர். இந்த மறியலால் பழனி மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே டாஸ்மாக் கடை கேட்டு மதுப்பிரியர்கள் மறியலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.