போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் கதிகலங்கி போன சாராய வியாபாரிகள்

கல்வராயன்மலையடிவாரப்பகுதிகளில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் கதிகலங்கி போன சாராய வியாபாரிகள் வெளியூருக்கு தப்பி ஓட்டம்

Update: 2022-08-21 16:39 GMT

மூங்கில்துறைப்பட்டு

கல்வராயன்மலை அடிவார கிராமங்களான புளியங்கோட்டை, மல்லாபுரம், ஆணைமடுவு உள்ளிட்ட பகுதிகளில் சாராயம் விற்பதற்கு ஏலம் விடப்பட்டு வந்தது. இதை போலீசார் தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொள்வதோடு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களாக கல்வராயன்மலை மற்றும் வடபொன்பரப்பி உள்ளிட்ட பகுதிகளில் சாராயம் விற்பனை செய்வோர், காய்ச்சுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் சாராயம் விற்பனை செய்ய ஏலம் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் கடந்த சில தினங்களாக போலீசார் தீவிர சாராய வேட்டை நடத்தி சாராயம் விற்பனைசெய்பவர்கள், காய்ச்சுபவர்களை கைது செய்யும் பணியில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் சாராயம் காய்ச்சும் இடங்களை கண்டறிந்து பறிமுதல் செய்யப்படும் சாராயத்தை அதே இடத்தில் கொட்டி அழித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 15-க்கும் மேற்பட்ட சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

போலீசாரின் இந்த திடீர் நடவடிக்கையை கண்டு அதிர்ச்சி அடைந்த சாராய வியாபாரிகள் மற்றும் காய்ச்சுபவர்கள் சிலர் தலைமறைவாக உள்ளனர். மேலும் சிலர் தப்பித்தோம், பிழைத்தோம் என்று வெளியூர்களுக்கு சென்று தலைமறைவாக இருப்பதாகவும், ஒரு சிலர் சாராயம் விற்பனையை கைவிட்டு கூலி வேலைக்கு செல்வதாகவும் கூறப்படுகிறது. போலீசாரின் இந்த அதிரடி நவடிக்கையால் சாராய வியாபாரிகளும், காய்ச்சுபவர்களும் கதிகலங்கி போய் உள்ளனர்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் சாராயம் விற்பனை மற்றும் காய்ச்சுபவர்களுக்கு உடந்தையாக இருக்கும் போலீசாரை களைஎடுக்கும் பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழ்குப்பம், சின்னசேலம் போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்து வந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால் சாராயம் விற்பனைக்கு உடந்தையாக இருக்கும் போலீசாரும் எங்கே எப்போது மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்திலும் இருந்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்