சிங்கவால் குரங்குகள் நடமாட்டம்

சிங்கவால் குரங்குகள் நடமாட்டம்

Update: 2022-09-08 17:11 GMT

தளி

உடுமலை மூணாறு சாலையில் சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இதனால் வாகனங்களை கவனமாக இயக்குமாறு வனத்துறையினர் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிங்கவால் குரங்கு

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, மலைப்பாம்பு, சிங்கவால்குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதுதவிர அரிய வகை உயிரினங்களும் மூலிகைகள், தாவரங்கள் வனப்பகுதியில் உள்ளன. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிடத்தை மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகள் பூர்த்தி செய்து தருகிறது. ஆனால் கோடை காலங்களில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்வதுடன் நீர்வரத்து இழந்து விடுகிறது.

இதனால் வன விலங்குகள் உணவு தேவையை பூர்த்தி செய்திருந்தாலும் கூட தாகம் தீர்ப்பதற்கு அடிவாரப்பகுதிக்கு வர வேண்டி உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களாக வனப்பகுதியில் சாரல் மலையும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக ஆறுகளிலும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.இதனால் வனப்பகுதியும் பசுமைக்கு மாறி உள்ளது. அத்துடன் கூடவே கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. அவற்றின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக யானை, மான், காட்டெருமை, சிங்கவால் குரங்குகள் அடிவாரப் பகுதியை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. மழையின் காரணமாக வனப்பகுதியில் வெப்பத்தின் தாக்குதல் குறைந்து உள்ளதுடன் இதமான சீதோசன நிலை நிலவி வருகிறது.

வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும்

இதனால் அடிவாரப்பகுதியில் முகாமிட்டுள்ள சிங்கவால் குரங்குகள் சாலையில் விளையாடி மகிழ்ந்த வண்ணம் உள்ளது.அத்துடன் வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்குள்ள மரங்களில் தஞ்சம் அடைந்துள்ளது.மேலும் கடந்த சில நாட்களாக அடிவாரப் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையைக் கடக்கும் வரையில் பொறுமை காத்து செல்ல வேண்டும். வனவிலங்குகளை துன்புறுத்துவது அவை மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவது உள்ளிட்ட செயல்களில் வாகனஓட்டிகள் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்