வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

பி.எம்.கிசான் திட்டத்தில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-09-03 18:30 GMT

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இது வரை 14 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 15-வது தவணை பெற விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பி.எம். கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விவசாயிகள் தங்களது வங்கி கணக்கினை நேரடி பணப்பரிமாற்றம் செய்வதற்கு ஏதுவாக மாற்றம் செய்திட வேண்டும். தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய தவறிய மற்றும் வங்கி கணக்கினை நேரடி பணபரிமாற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 15-வது தவணை மற்றும் அதனை தொடர்ந்து வரும் தவணைகள் வழங்கப்படமாட்டாது. எனவே விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அருகே உள்ள இ-சேவை மையங்கள் அல்லது தபால் நிலையங்களை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்திட வேண்டும். மேலும், விவசாயிகள் தாமாகவே பி.எம். கிசான் செயலி மூலம் முக அடையாளத்தை பயன்படுத்தி (இ-கே.ஒய்.சி.) செய்து கொள்ளலாம். நேரடி பணப்பரிமாற்றம் செய்வதற்கு ஏதுவாக வங்கி கணக்கினை மாற்றுவதற்கு தங்களது வங்கி கணக்கு உள்ள சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளை அணுகி மேற்கூறிய செயல்முறையை செய்திட அறிவுறுத்தப்படுகிறது. அல்லது இந்தியா போஸ்ட் வங்கிகளை அணுகி அவ் வங்கிகளில் புதிய வங்கி கணக்குகளை உருவாக்கிட வேண்டும். மேற்கூறிய குறைபாடுகளை சரிசெய்து விவசாயிகள் பி.எம். கிசான் திட்டப்பலனை தொடர்ந்து பெற்று பயனடையுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்