லிங்காபுரம் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது

பில்லூர் அணை நிரம்பியதால் லிங்காபுரம் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் பழங்குடியின மக்கள் பரிசலில் பயணம் செய்கின்றனர்.;

Update: 2022-08-12 16:51 GMT

பில்லூர் அணை நிரம்பியதால் லிங்காபுரம் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் பழங்குடியின மக்கள் பரிசலில் பயணம் செய்கின்றனர்.

பழங்குடியின கிராமங்கள்

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே காந்தவயல், ஆளூர்வயல், மொக்கைமேடு ஆகிய பகுதிகளில் பழங்குடி இனத்தை சேர்ந்த 300-க்கும் மேலான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

அவர்கள், லிங்காபுரம் தரைப்பாலத்தின் வழியாகத்தான் பழங் குடியின கிராமங்களுக்கு செல்ல முடியும். தற்போது பில்லூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாகி நிரம்பி வழிகிறது. இதனால் லிங்காபுரத்தில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

பரிசலில் செல்லும் நிலை

இதன் காரணமாக பழங்குடியின மக்கள் தங்களது கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடிய வில்லை. அவர்கள் ஊருக்கு உள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.

உணவுப்பொருள், மருத்துவ உதவி போன்ற அத்தியாவசிய தேவைக்கு பரிசலில் சென்று பாலத்தை கடக்கும் நிலை உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் இதேபோன்று பாலம் தண்ணீரில் மூழ்கியபோது, பிரசவித்த ஒரு பெண்ணின் குழந்தைக்கு அவசர சிகிச்சை கிடைக்க முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. இதுபோன்ற நிலைமை தொடர்ந்து வருகிறது.

உயர்மட்ட பாலம்

பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் காந்தவயல் பகுதியில் தான் தண்ணீர் தேக்கம் அதிகமாக இருக்கும். இதனால் தரைப் பாலம் அடிக்கடி தண்ணீரில் மூழ்குவதால் உயர்மட்ட பாலம் தான் இதற்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பிரச்சினை குறித்து கலெக்டர் சமீரன் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. உயர்மட்டபாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரும் உறுதியளித்துள்ளார்.

மேலும் செய்திகள்