பீகாரில் கோ-பேக் ஸ்டாலின் போல தமிழகத்திலும் விரைவில் உருவாகும்- ஆர்.பி.உதயகுமார் பேட்டி

பீகாரில் கோ-பேக் ஸ்டாலின் என்று டிரெண்டிங் உருவானது போல் விரைவில் தமிழ்நாட்டிலும் உருவாகும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Update: 2023-06-23 00:59 GMT


பீகாரில் கோ-பேக் ஸ்டாலின் என்று டிரெண்டிங் உருவானது போல் விரைவில் தமிழ்நாட்டிலும் உருவாகும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

நினைவு மண்டபம்

தமிழக சட்டசபை எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவரது அமைச்சர்களும் பொறுப்பற்று செயல்படுகிறார்கள். அவர்களுக்கு நிர்வாக திறன் இல்லை. இவர்களது பேச்சால் தமிழகத்தை மற்ற மாநிலத்தவர்கள் கேவலமாக எண்ண தொடங்கி உள்ளனர். அமைச்சர் எ.வ.வேலு, பீகாரிகள்தான் தமிழகத்திற்கு வேலைக்கு வருகின்றனர். தமிழர்கள் யாரும் அங்கு வேலைக்கு செல்வதில்லை என்பதனை பீகாரியான கவர்னர் ரவி தெரிந்து கொள்ள வேண்டும் என்று பேசுகிறார். கவர்னரை தாக்கி பேசுகிறோம் என்ற அடிப்படையில் ஒட்டுமொத்த பீகார் மாநிலத்தையும் தவறாக பேசுகிறார். ஏன் பீகாரை சேர்ந்த பிரஷாந்த் கிஷோரை வைத்து தேர்தல் பணி செய்தீர்கள். அதே போல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு மண்டபத்தை திறக்க பீகார் மாநில முதல்-அமைச்சர் நிதிஷ் குமாரை அழைத்தார்?. அமைச்சர் எ.வ.வேலுவின் ஆணவ பேச்சு காரணமாக இந்த விழாவில் பங்கேற்பதை நிதிஷ் குமார் தவிர்ந்து விட்டார். தற்போது எதிர்கட்சிகள் கூட்டத்தை நிதிஷ் குமார் பீகாரில் கூட்டி உள்ளார். அந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் சென்று உள்ளார்.

எனவே அந்த மாநிலத்தை சேர்ந்த பொதுமக்கள் கோ-பேக் ஸ்டாலின் என்று டிரெண்டிங் செய்து வருகின்றனர். இது தமிழகத்திற்கே அவமானம் அல்லவா?. ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் நடந்த முதல்-அமைச்சர் சித்தராமையா பதவியேற்பு விழாவில் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு மேடையில் உரிய மரியாதை தரப்படவில்லை. வெளிமாநிலங்களில் ஸ்டாலினை யாரும் மதிப்பதில்லை. ஆனால் அவர் இந்தியாவிலேயே முதன்மை முதல்-அமைச்சர் நான் தான் என்று தனக்கு தானே பெருமை பேசி வருகிறார்.

சந்தேக பார்வை

தி.மு.க. கூட்டணியில் உள்ள வைகோ கவர்னரை பதவி நீக்க செய்ய வேண்டும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார். அதில் நல்லகண்ணு, திருமாவளவன் ஆகியோர் கையெழுத்திட்டனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கையெழுத்து வாங்க வைகோ அறிவாலயம் சென்றார். ஆனால் ஸ்டாலின் கையெழுத்து போட மறுத்து விட்டார். அதனால் கூட்டணி கட்சிகள் தி.மு.க. மீது சந்தேக பார்வையோடு உள்ளனர். தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு செல்வாக்கு இல்லை. எனவே பீகார் மக்கள் போல் தமிழக மக்களும் விரைவில் கோ-பேக் ஸ்டாலின் என்று சொல்லதான் போகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்