பழனிக்கு வருகை தரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள்; கோவில் நிர்வாகம் ஏற்பாடு

பழனிக்கு வருகை தரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் வழங்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் ஒளிரும் பட்டைகள் வழங்க விரும்பும் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-27 15:11 GMT

பழனிக்கு வருகை தரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் வழங்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் ஒளிரும் பட்டைகள் வழங்க விரும்பும் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒளிரும் பட்டைகள்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் பழனிக்கு வருகை தருவார்கள்.

இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு தற்போதே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வரத்தொடங்கியுள்ளனர். இதனால் பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், சாலைகளில் அவர்கள் செல்லும்போது வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் விதமாகவும் ஒளிரும் பட்டைகள் மற்றும் ஒளிரும் குச்சிகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டும் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் மற்றும் குச்சிகள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -

தன்னார்வலர்களுக்கு அழைப்பு

மதுரை மார்க்கமாக பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நத்தம், செம்பட்டி, வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி ஆகிய சாலைகளிலும், திருச்சி மார்க்கமாக பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு மணப்பாறை, வடமதுரை, வேடசந்தூர் ஆகிய சாலைகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தாராபுரம் மார்க்கமாக பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பல்லடம், காங்கயம், கொடுவாய், தாராபுரம் ஆகிய சாலைகளிலும், கோவை மார்க்கமாக பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பொள்ளாச்சி, உடுமலை சாலைகளிலும் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் மற்றும் ஒளிரும் குச்சிகள் வழங்கப்பட உள்ளது.

எனவே இந்த பணியில் கோவில் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட விருப்பமுள்ள தன்னார்வலர்கள், முருக பக்தர்கள், அரிமா மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கோவில் நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் கோவில் தொலைபேசி எண்கள் 04545-242236, 04545-240293, 9489668082 என்ற வாட்ஸ்-அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி jceomdu-32203.hree@tn.gov.in மூலம் பதிவு செய்ய வேண்டும். தற்போது பழனி கோவில் தலைமை அலுவலகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒளிரும் பட்டைகள், குச்சிகளில் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்