அதிராம்பட்டினம் கடற்கரையோரம் கலங்கரை விளக்கம் அமைக்கப்படுமா? - மீனவர்கள்

கரை தெரியாமல் திசை மாறி செல்லும் ஆபத்து நீடிப்பதால் அதிராம்படடினம் கடற்கரையோரம் கலங்கரை விளக்கம் அமைக்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-02-10 19:00 GMT

கரை தெரியாமல் திசை மாறி செல்லும் ஆபத்து நீடிப்பதால் அதிராம்படடினம் கடற்கரையோரம் கலங்கரை விளக்கம் அமைக்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இயற்கை சீற்றம்

விவசாயத்துக்கு பெயர் பெற்ற தஞ்சை மண்ணில் மீன்பிடி தொழிலும் பிரதானமானதாக விளங்குகிறது. மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இயற்கை சீற்றம் மீன்பிடி தொழிலுக்கு பெரும் ஆபத்தாக உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இயற்கை சீற்றங்களில் இருந்து மீனவர்களை பாதுகாக்கும் வசதிகள் குறைவாகவே உள்ளன. நாகை போன்ற கடலோர பகுதிகளில் உள்ள பாதுகாப்பு வசதிகள் தஞ்சை மாவட்டத்தில் இல்லை என்பது மீனவர்களின் வேதனையாக உள்ளது.

நாட்டுப்படகுகள்

தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தின் எழில்மிகு கடலோர பகுதியாக அதிராம்பட்டினம் விளங்குகிறது. அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை மறவக்காடு, கரிசக்காடு, கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திசை மாறி செல்லும் அபாயம்

அதிராம்பட்டினம் கடற்கரை பகுதி சேற்றுக்கடல் பகுதியாகும். இந்த பகுதியில் கடலில் இருந்து படகுகளை கரைக்கு கொண்டு வருவது மிகவும் சிரமம். சேற்றுக்கடல் என்பதால் கடற்கரையில் படகுகளை நிறுத்த வசதியில்லை. இதனால் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை துறைமுகவாய்க்கால் உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

மழை மற்றும் பனி மூட்டம் நிலவும் காலங்களில் கடலில் மீன் பிடித்து கரைக்கு திரும்புவது இந்த பகுதி மீனவர்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் இதுபோன்ற காலங்களில் கரைப்பகுதி முழுமையாக தெரியாது. இதனால் மீனவர்கள் திசை மாறி வேறு பகுதிகளுக்கு சென்று விடும் அபாய நிலை நீடிக்கிறது.

கலங்கரை விளக்கம்

மேலும் சரியான நேரத்தில் தாங்கள் பிடித்து வரும் மீன்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் மீனவர்கள் உள்ளனர். கடும் சிரமங்களுக்கு இடையே கடலுக்கு சென்று மீன்பிடித்து களைப்புடன் கரை திரும்பும் வேளையில் கரை தெரியாமல், மீனவர்கள் அலைச்சலுக்கு ஆளாகின்றனர்.

கடலுக்கு படகில் சென்று மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பும் மீனவர்கள் சரியான திசையில் வருவதற்கு உதவும் வகையில் அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியில் கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டும் என அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி மீனவர்கள் கூறியதாவது:-

தஞ்சை மாவட்ட கடற்கரையை பொறுத்த வரை மனோராவில் மட்டுமே கலங்கரை விளக்கம் உள்ளது. மற்றபடி தம்பிக்கோட்டை முதல் கீழத்தோட்டம் வரை கலங்கரை விளக்கம் இல்லாததால் மழை மற்றும் பனி காலங்களில் மீன்பிடித்து விட்டு நாங்கள் கரை திரும்பும்போது சரியான திசை தெரியாமல் முத்துப்பேட்டை மற்றும் கட்டுமாவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு திசை மாறி செல்ல வேண்டியுள்ளது.

நேர விரயம்

இதனால் எங்களுக்கு நேர விரயம் ஏற்பட்டு, அலைச்சலும் உண்டாகிறது. இதனால் மீனவர்களின் நலன் கருதி உடனடியாக அதிராம்பட்டினம் கடற்கரையோர பகுதியில் கலங்கரை விளக்கம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மீனவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்