வாலிபருக்கு ஆயுள் தண்டனை

மாற்றுத்திறனாளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-11-28 19:01 GMT

மாற்றுத்திறனாளி மாணவி

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 19). இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டில் 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு படித்து வந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகினார். மேலும் உல்லாசமாக இருந்துள்ளார். அந்த மாணவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன போது பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது மாணவி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அவரிடம் இதுகுறித்து பெற்றோர் கேட்ட நிலையில், தினேஷ்குமாரிடம் நெருங்கி பழகிய விவகாரத்தை மாணவி தெரிவித்தார்.

போக்சோ வழக்கு

இதைத்தொடர்ந்து தினேஷ்குமாரிடம் நடந்த சம்பவம் குறித்து மாணவியின் தரப்பில் கேட்ட போது அவர் தனக்கு எதுவும் தெரியாது, மாணவி கர்ப்பமானதற்கு தான் காரணமில்லை என தெரிவித்து நழுவ பார்த்தார். இது தொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதில் டி.என்.ஏ. பரிசோதனையில் குழந்தையின் தந்தை தினேஷ்குமார் என்பது உறுதியானது.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு அறிவுறுத்தினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். தீர்ப்பு கொடுப்பதற்கு முன்பு நீதிபதியிடம், தினேஷ்குமார் தான் அந்த மாணவியை தற்போது திருமணம் செய்துகொள்கிறேன் என கூறினார். ஆரம்பத்தில் செய்த தவறை மறுத்து வந்த நிலையில், டி.என்.ஏ. பரிசோதனை உறுதியானதால் தீர்ப்பு வழங்கும் நாளில் மாணவியை தற்போது திருமணம் செய்து கொள்கிறேன் என கூறுவதை நீதிபதி கண்டித்தார். தண்டனை விதிக்கப்பட்ட தினேஷ்குமாரை கோர்ட்டில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்