வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கல்வீச்சில் காரில் சென்றவர் இறந்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-09-27 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி தேவர் குருபூஜை விழாவையொட்டி ஏற்பட்ட தகராறில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குண்டுகாவில் பகுதியை சேர்ந்த அபுபக்கர் (வயது 50) என்பவர் காரில் ஏர்வாடி தர்காவிற்கு செல்வதற்காக ஆர்.எஸ்.மடை துணை மின்நிலையம் அருகில் வந்தார். அப்போது கற்கள் வீசப்பட்டன.

இந்த கல்வீச்சில் காரில் சென்ற அபுபக்கர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக அவருடன் வந்த உறவினரான ஜெயினுலாபுதீன அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை மாரிமுத்து (26), முத்துகாளீசுவரன் (24), அல்லிக்கண்மாய் தெரு ராஜசேகர், நாடார் தெரு நாகராஜ், கவராயர் தெரு சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நடந்தபோது மாரிமுத்து இறந்துவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கினை நீதிபதி சீனிவாசன் விசாரித்து, முத்துகாளீசுவரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அதனை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மனோகரன் ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்