பெண்ணை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
பெண்ணை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள எஸ்.என்.புரம் பகுதியில் வசித்து வந்தவர் ஈஸ்வரி (வயது 60). இவருடைய மகன் அருணாச்சல பாண்டியன் (37). கூலி தொழிலாளியான இவர் அடிக்கடி ஈஸ்வரியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 21.2.2019-ந் தேதியன்று இரவு வீட்டுக்கு சென்ற அருணாச்சல பாண்டியன், ஈஸ்வரியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். அப்போது அவர் பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அருணாச்சல பாண்டியன் கையில் வைத்திருந்த கயிற்றால் தன் தாயாரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சல பாண்டியனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து அருணாச்சல பாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.